By Andre Damon.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் 400,000 பாலஸ்தீனியர்களை வன்முறையில் இடம்பெயரச் செய்யும் நோக்கில், இஸ்ரேல் அதன் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையைத் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பின்னர், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தினசரி படுகொலைகள் மற்றும் வேண்டுமென்றே பட்டினி போட்டு வதைத்து வருவதற்கு மத்தியில், திங்களன்று ஜபாலியா அகதிகள் முகாமிலிருந்த மக்களை துப்பாக்கி முனையில் வெளியேற்றியது.
இனப்படுகொலையை வழிநடத்தும், ஆயுதமளிக்கும், நிதியளிக்கும் மற்றும் மேற்பார்வையிடும் அமெரிக்காவின் பிரதிநிதியான வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், படுகொலைகளை நேரில் மேற்பார்வையிட இஸ்ரேலுக்கு பயணித்தபோது இந்த காட்சிகள் இடம்பெற்றன.
ஜபாலியா அகதிகள் முகாமின் இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நூற்றுக்கணக்கான மக்களை நோக்கி இஸ்ரேலிய துருப்புக்கள் ஆயுதங்களை நீட்டுகின்ற ட்ரோன் காட்சிகளை, IDF திங்களன்று வெளியிட்டது.
“ஒழுங்கமைக்கப்பட்ட பாதைகள் வழியாக அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேலிய இராணுவம் அனுமதிக்கிறது” என்று அதன் செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே டுவிட்டர் X இல் ஒரு இடுகையில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டு பெருமை பீற்றிக் கொண்டார். உண்மையில், பல்லாயிரக்கணக்கான ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், அதே நேரத்தில் பெண்களும் குழந்தைகளும் துப்பாக்கி முனையில் தெற்கு நோக்கி நகர நிர்பந்திக்கப்பட்டனர்.
“நாங்கள் குண்டு வீச்சுக்களாலும், தாகத்தாலும், பசியாலும் மரணத்தை எதிர்கொள்கிறோம்” என்று ஜபாலியா முகாமில் வசிக்கும் ரேட் என்பவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். “ஜபாலியா அழிக்கப்படுகிறது, குற்றத்திற்கு சாட்சிகள் இல்லை; உலகம் தன் கண்களைக் குருடாக்கிக் கொண்டிருக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
திங்களன்று 41 பேர் கொல்லப்பட்டது உட்பட, 17 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து வடக்கு காஸாவில் இஸ்ரேலிய படைகள் 650 பாலஸ்தீனியர்களை இதுவரை கொன்றுள்ளன. “வடக்கு காஸாவில் இனப்படுகொலை அதன் தெளிவான வடிவத்தில், உலகின் முழு பார்வையில் கட்டவிழ்ந்து வருகிறது” என்று பாலஸ்தீனிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம், இஸ்ரேலிய இராணுவத்தின் உத்தரவுகள் “கட்டாய இடப்பெயர்வுக்கு இட்டுச் செல்வதாகவும், காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களை மரணம் மற்றும் இடப்பெயர்ச்சியின் மூலம் அழிக்கக் கூடும்” என்றும் அதன் மிக அப்பட்டமான வார்த்தை பிரகடனங்களில் ஒன்றில் தெரிவித்துள்ளது. “இது குறிப்பாக ஜபாலியா, பெய்ட் லஹியா மற்றும் பீட் ஹனூன் போன்ற இடங்களை சுற்றியே உள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அக்டோபர் 6 க்குப் பின்னர் இருந்து இரண்டு வாரங்களாக, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காஸாவில் பாலஸ்தீனியர்கள் வாழ்வதை சாத்தியமற்றதாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதேவேளையில் அப்பகுதியிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் இடம்பெயரச் செய்ய மீண்டும் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.” மேலும், “இஸ்ரேலிய அதிகாரிகள் வடக்கு காஸாவிற்குள் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நுழைவதை தடுத்துள்ளனர்” என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
அது மேலும் “இஸ்ரேலிய இராணுவம் அனைத்து அப்பாவி மக்களும் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரியுள்ள அதேவேளையில், அப்பகுதியில், குறிப்பாக ஜபாலியா முகாமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடைவிடாது குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது” என்று குறிப்பிட்டது.
“பாலஸ்தீனிய ஆண்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை எழுப்புகிறது” என்று ஐ.நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
UNRWA இன் ஆணையர் ஜெனரல் பிலிப் லஜாரினி, “முற்றுகையின் கீழ் உள்ள மக்களுக்கு மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட முக்கியமான பொருட்களுடன் மனிதாபிமான பணிகள் வடக்கை அடைய இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்” என்று கூறினார். “எஞ்சியுள்ள தங்குமிடங்கள் மிகவும் நெரிசலாக உள்ளன, சில இடம்பெயர்ந்த மக்கள் இப்போது கழிப்பறைகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேல் “இராணுவ நோக்கங்களை அடைவதற்காக மனிதாபிமான உதவிகளை மறுத்து ஆயுதமாக்குகிறது” என்று லாஸ்ஸாரினி குற்றம் சாட்டினார். “தப்பி ஓட முயற்சிக்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள், அவர்களின் உடல்கள் தெருக்களில் விடப்படுகின்றன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குனர் ஹுசாம் அபு சபியா இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனையை முற்றிலுமாக முற்றுகையிட்டுள்ளதாகவும், அதன் ஊழியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். “மருத்துவமனையின் இரத்த அலகுகள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டன,” என்று அவர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “நோயாளிகளுக்கு முன்னுரிமை சிகிச்சை முறையை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதுதான் யதார்த்தம்” என்று அவர் குறிப்பிட்டார்.
வடக்கு காஸாவில் இந்தோனேசிய மருத்துவமனைக்கு அருகில் ஒரு செவிலியர் ராய்ட்டர்ஸிடம், “இராணுவம் மருத்துவமனைக்கு அடுத்துள்ள பள்ளிகளை எரிக்கிறது, யாரும் மருத்துவமனைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது” என்று கூறினார்.
உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையின்படி, இஸ்ரேலிய துருப்புக்களாலும், குண்டு வீச்சுக்களினாலும் குறைந்தபட்சம் 42,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10,000 பேர் இதில் கணக்கிடப்படவில்லை. இஸ்ரேல் வேண்டுமென்றே பட்டினியை ஏற்படுத்தி, தொற்று நோய்களை பரவ விட்டதன் விளைவுகளைக் கணக்கிட்டால், நிஜமான இறப்பு எண்ணிக்கை 186,000 தாண்டக்கூடும் என்று தி லான்செட் ஜூலையில் அறிவித்தது—இதன் அர்த்தம் நிஜமான இறப்பு எண்ணிக்கை இப்போது நூறாயிரக் கணக்கில் இருக்கக்கூடும் என்பதாகும்.
இனப்படுகொலையில் அமெரிக்கா தனது நேரடித் தலையீட்டை ஆழப்படுத்தி வருவதால் வடக்கு காஸாவில் மொத்தப் பட்டினி மற்றும் முழுமையான இனச் சுத்திகரிப்பு (”தளபதிகளின் திட்டம்” என்று குறிப்பிடப்படுகிறது, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்டால் உருவாக்கப்பட்டது) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அதன் நிர்மூலமாக்கும் போரைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திங்கள்கிழமை இஸ்ரேலுக்கு வருவது அவரது பதினொன்றாவது பயணத்தைக் குறிக்கிறது. அவரது வருகையானது, இஸ்ரேலில் 100 அமெரிக்க போர் துருப்புக்களின் இறுதி நிலைநிறுத்தம் மற்றும் ஒரு மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு பேட்டரியை இயக்குவதற்கு இடையில் இடம்பெற்றது. “அந்த ஏவுகணை அமைப்பு நடைமுறையில் உள்ளது,” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காஸாவில் தங்கள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடருகையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் லெபனான் முழுவதும் மாடிக் கட்டிடங்கள் மற்றும் பிற சிவிலிய உள்கட்டுமானங்களை தரைமட்டமாக்கின. பெய்ரூட் முழுவதும் திங்களன்று 13 இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு, திங்களன்று 24 பேர் காயமடைந்ததாகவும், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாஹெல் மருத்துவமனையின் கீழ் ஹிஸ்புல்லாவின் ஒரு பதுங்கு குழி இருப்பதாக இஸ்ரேல் கூறியதை அடுத்து, பீதிக்கு மத்தியில் அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஸாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனை அழிக்கப்படுவதற்கு முன்னர், பொதுமக்களுக்கு பாரிய மரணதண்டனைகள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் கூறிய கூற்றுக்களை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
[This translation was originally published here at wsws.org/ta]